உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி வீதியுலா, நேற்று தேரோட்டம் நடந்தது.

ஆனி திருமஞ்சன தரிசன நாளான இன்று அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பு பகுதியில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பின்னர் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கரகோஷத்துடன், ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமியும், அம்பாளும் திருவாபரண அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பிற்பகல் 2.50 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனம் நடைபெற்றது. ஆயிரங்கால் மண்டத்தில் இருந்து மேள தாளங்கள், வேத மந்திரங்கள் முழங்கிட, பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடியவாறு, நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும், நடனமாடியபடி சித்சபை பிரவேசம் செய்தனர். இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர். எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் டி.எஸ்.பி., லாமேக் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபட்டனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !