ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருடசேவை கோலாகலம்
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ஐந்தாம் திருநாளான நேற்றிரவு ஐந்து கருட சேவை கோலாகலமாக நடந்தது. நேற்று காலை ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்களாசாசனம் நடந்தது. இந்நிலையில் நேற்று இரவு 10:00 மணிக்கு மேல் ஐந்து கருடசேவை உற்ஸவம் துவங்கியது. இதில் ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், ரெங்க மன்னார், பெரிய பெருமாள், காட்டழகர் சுந்தரராஜ பெருமாள், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதிகள், ரத வீதிகளை சுற்றி வந்தனர். அப்போது பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோலாட்டம் ஆடியபடி நாம சங்கீர்த்தன பஜனை பாடி சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறநிலையத்துறையினர் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.