உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் கற்பூர ஆழி பூஜை!

சபரிமலையில் கற்பூர ஆழி பூஜை!

சபரிமலை: சபரிமலையில் தினமும், ஏழு லட்சம் அப்பம் தயாரிப்பதற்கான, இயந்திரம் விரைவில் நிறுவப்பட உள்ளது. சபரிமலையில் நடப்பு சீசனுக்காக, இருப்பு வைக்கப்பட்டிருந்த அப்பங்களில், பூஞ்சை படிந்ததால் அவை அழிக்கப்பட்டன. இதனால், அப்பம் வினியோகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது, மும்பை நிறுவனம் ஒன்று, தினமும் ஏழு லட்சம் அப்பம் தயாரிக்கும் இயந்திரத்தை, சபரிமலைக்கு வழங்க உள்ளதாகவும், அதை பெங்களூரு பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்க உள்ளதாகவும், தேவஸ்தான உறுப்பினர் சுபாஷ் கூறினார். சபரிமலையில் கடைகள் வாடகை மற்றும் குத்தகை முறையில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க, இ-டெண்டர் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கற்பூரஆழி: மண்டல பூஜைக்கு முன்னோடியாக தேவசம்போர்டு ஊழியர்களின் கற்பூர ஆழி பூஜை, நாளை சன்னிதானத்தில் நடக்கிறது. அன்று மாலை தீபாராதனைக்கு பின், தந்திரி கண்டரரு ராஜீவரரு கற்பூரதீபம் ஏற்ற, கற்பூரம் கொளுந்து விட்டு எரியும் பாத்திரத்துடன், மேளதாளம் முழங்க, கற்பூர ஆழி பவனி புறப்படும். சன்னிதானத்தில் ஸ்ரீகோவிலை வலம் வந்த பின், மாளிகைபுறம் கோவில் வழியாக 18ம் படியருகே கற்பூர ஆழி பவனி நிறைவு பெறும்.

மூன்று கோடி வருவாய்: சபரிமலைக்கு பஸ் மற்றும் வேன்களில் வரும் பக்தர்கள், பம்பையில் இறங்கிய பின், அவர்களின் வாகனங்கள் நிலக்கல்லுக்கு சென்று விடும். தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், கேரள அரசு பஸ் மூலம் நிலக்கல் சென்று, அங்கிருந்து அவர்களது வாகனத்தில் ஊர் திரும்ப வேண்டும். நிலக்கல்-பம்பை வழியில் மட்டும், கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு மூன்று கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !