காரமடை அரங்கநாதர் கோவிலில் சேஷ வாகனத்தில் தெப்பத் திருவிழா
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சேஷ வாகனத்தில் தெப்பத்திருவிழா நடந்தது. காரமடை அரங்கநாதர் கோவிலில், கடந்த 2ம் தேதி தேரோட்டம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள், சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். நான்கு ரத வீதிகளில் திருவீதி உலா வந்தார். பின், தெப்பக்குளத்தில், வண்ண விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் எழுந்தருளினார். மங்கல வாத்தியங்கள் முழங்க, தேர் தெப்பக்குளத்தை மூன்று முறை சுற்றி வந்தது. திரண்டிருந்த பக்தர்கள் ரசித்தனர். கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் வேத பாராயணம் செய்தனர். விழா மண்டப கட்டளையில், பரிசல் ஓட்டிகள், காவல்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோருக்கு மாலை மரியாதை செய்யப்பட்டன.