பாகூர் மூலநாதர் கோவிலில் சனி பெயர்ச்சி; பக்தர்கள் பரவச தரிசனம்
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், தனி சன்னதி கொண்டு பொங்கு சனி பகவான் காட்சி தருகிறார். மேல் வலது கரத்தில் சூலமும், இடது கரத்தில் காக்கையும், வலது கீழ்கரத்தில் நீதிக் கோளும், இடது கீழ்க்கரத்தில் கமண்டலமும் மற்றும் ஏர் கலப்பையுடன், மேற்கு முகமாய், ஈசானிய பாகத்தில் இருந்து அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அதையொட்டி, காலை 8:26 மணிக்கு, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனிப் பெயர்ச்சி நேரத்தை கணக்கிட்டு, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. பொங்கு சனீஸ்வரர், தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்கி கொள்ள, பாகூரில் சுயம்புவாக உருவான மூலநாதர் லிங்கத்தை வழிபட்டு, விமோசனம் பெற்றதாக கூறப்படுகிறது. கோவிலின் வடகிழக்கு திசையில் மேற்கு முகம் பார்த்து, இடது கையில் கமண்டலம், தோலில் ஏர் கலப்பை, காக்கை கொடியுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக கருதப்படுகிறது. ஏழரை சனியின் இரண்டாவது, இரண்டரை ஆண்டில் உள்ளவர்கள், எள் தீபம் ஏற்றி, பொங்கு சனி பகவானை வழிபடுவது சிறப்பான பயனை தரும் என்பது ஐதீகம். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவக்குமார் மற்றும் கோவில் சிவாச்சார்யார்கள் செய்துள்ளனர்.