300 ஆண்டுகள் பழமையான சதிக்கல்; பல்லடம் அருகே கிராம மக்கள் வழிபாடு!
பல்லடம்; பல்லடம் அருகே, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சதிக்கல்லை, கிராம மக்கள், பல நூறு ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த, கரிசல்மடை கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சதிக்கல் ஒன்று உள்ளது. இங்குள்ள கிராம மக்கள் இந்த சதிக்கல்லை வழிபட்டு வருகின்றனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட பல்லடம் வரலாற்று ஆர்வலர் குழுவை சேர்ந்த மகிழ்வேல் பாண்டியன் கூறுகையில், பல்லடம் வட்டார பகுதியில் காணப்படும் பண்டைய நாகரீகம், வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், கல்வெட்டுக்கள், சிற்பங்கள், கல் திட்டைகள் உள்ளிட்ட பலவற்றையும் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அவ்வகையில், பல்லடத்தை அடுத்த, கரிசல்மடை கிராமத்தில், காம்பிலி நதிக்கரை ஓரமாக சிற்பங்கள் காணப்பட்டன. இது
குறித்து ஆய்வு செய்தபோது, இவை, 300 ஆண்டுக்கு முற்பட்டவை என்பது தெரியவந்தது. இதில், ஆண் மற்றும் பெண் சிலைகள் இடம்பெற்றுள்ளள. ஆண் சிலை, போர்வீரன் அல்லது கிராமத்தின் தலைவராக இருக்கலாம் என்பதும், உடன் இருக்கும் பெண் சிலை அவரது மனைவியையும் குறிக்கிறது. முந்தைய காலத்தில், கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. அவ்வாறு, கணவருடன் மனைவியும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்ததை இந்த சிற்பம் எடுத்துரைக்கிறது. சிற்பத்தில் உள்ளவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. மேலும், இது குறித்த கல்வெட்டுக்களும் இங்கு இல்லை. கைகூப்பிய நிலையில் ஆண் சிலையும், கையில் குடுவை மற்றும் பூச்செண்டு பிடித்தபடி பெண் சிலையும் உள்ளது. தங்களது முன்னோர்களை பின்பற்றி, பல நூறு ஆண்டுகளாக இந்த சிற்பங்களை வழிபட்டு வருவதாக இங்குள்ள கிராம மக்கள் கூறுகின்றனர். கணவருடன் மனைவியும் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது குறித்து வரலாற்றில் தான் படித்துள்ளோம். அதற்கு ஆதாரமாக, பல்லடம் பகுதி கிராமத்தில் சிற்பம் இருப்பதும், கிராம மக்கள் சிற்பங்களை வழிபட்டு வருவதும் வியப்பினை ஏற்படுத்துவதாக உள்ளது.