வடமதுரை கோயில் விழாவில் தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்ற பக்தர்கள்
வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் நேர்த்திக்கடன் வழிபாடாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்றனர்.
வடமதுரை தென்னம்பட்டி கே.குரும்பபட்டியில் யோக விநாயகர், அகோர வீரபுத்திரர், கருக்காளியம்மன், இராவனேஸ்வரர், கெப்பாயம்மன், கருப்பண சுவாமி கோயில் உள்ளது. இங்கு நேற்று இரவு துவங்கிய ஆடித் திருவிழாவில், ஆற்றில் இருந்து சுவாமி கரகங்கள் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை நேர்த்திக்கடன் வழிபாட்டிற்காக பல நாட்கள் விரதமிருந்த பெண்கள் உள்பட 123 பக்தர்கள் கோயில் முன்பாக அமர்ந்தனர். கோயில் பூஜாரி மாரிமுத்து தனது காலில் பாதகுரடு அணிந்து, வயிற்றில் ஈட்டியால் குத்தி கொள்ளுதல் உள்ளிட்ட பாரம்பரிய வழிபாடுகளை முடித்து பக்தர்கள் தலையில் தலா ஒரு தேங்காய் உடைத்தார். பின்னர் தலா ஒரு சாட்டையடி பெற்று கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். மஞ்சள் நீராட்டுடன் சுவாமிகள் கங்கை செல்லுதலுடன் திருவிழா நிறைவடைந்தது. விழா ஏற்பாட்டினை குரும்ப கவுண்டர் சமூகத்தின் மிளகு, ஆசுத குலத்தார்கள் செய்திருந்தனர்.