உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மூஷிக வாகனத்தில் உற்சவர் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்;


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை சண்டிகேசுவரர் சந்நிதியில் இருந்து கொடி புறப்பாடாகி கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து கொடி மரம் அருகே உற்சவ விநாயகர், அங்குசத்தேவர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இங்கு சதுர்த்தி பெருவிழா இன்று தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இரண்டாம் நாள் முதல் எட்டாம் நாள் வரை காலை, மாலை உற்சவ விநாயகர் திருவீதி உலா நடைபெறும். விழாவின் 6ம் நாள் மாலை கஜமுக சூரசம்ஹாரமும், 9ம் நாள் தேரோட்டமும், 10ம் நாள் விநாயகர் சதுர்த்தி அன்று காலை தீர்த்தவாரி உற்சவமும், மதியம் மோதகம் படையலும் நடைபெறும். இந்நாளில் தமிழகம்  மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் மற்றும்  வெளிநாடுகளில் இருந்தும்  லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகரை தரிசனம் செய்வார்கள். இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். முக்கிய நிகழ்வாக ஆக., 26 தேரோட்டம், ஆக., 27 தீர்த்த வாரி உற்ஸவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !