உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீய சக்திகளை அண்ட விடாமல் தடுக்கும் வீரபத்ர சுவாமி

தீய சக்திகளை அண்ட விடாமல் தடுக்கும் வீரபத்ர சுவாமி

பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, பழைய நிஜகல் பகுதியில் அமைந்து உள்ளது உட்டண்ணா ஸ்ரீ வீரபத்ர சுவாமி கோவில்.


பெங்களூரில் இருந்து 60 கி.மீ., தொலைவில், தாபஸ்பேட்டை பகுதிக்கு அருகில் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவில் கட்டப்பட்டு, 1,600 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். விஜயநகரா கட்டட கலையில் கட்டப்பட்டு உள்ளது.


இந்த கோவிலில் மூலவராக வீரபத்ர சுவாமி உள்ளார். இவரின் திருஉருவ சிலை 16 அடி உயரம் கொண்டது. பார்ப்பதற்கே பிரமிப்பாக இருக்கிறது. இந்த சிலை, ஒரே கல்லால் செய்யப்பட்டது. கோவிலில், சிகர பசவண்ணா, சாக் ஷி கணபதி, முக்தி கணபதி, பத்ர காளி, பிரம்மா, சிவலிங்கம் ஆகிய சன்னிதிகள் இருக்கின்றன.


வீரபத்ர சுவாமிகள் நான்கு கைகளில் வில், வாள், வேல், கேடயம் போன்ற ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காட்சி அளிக்கிறார். வீரபத்ர சுவாமி, தீய சக்தியிலிருந்து பாதுகாப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். எனவே, கெட்ட எண்ணங்கள், தீய சக்திகளிலிருந்து பாதுகாக்க வேண்டி பக்தர்கள் மனமுருகி வேண்டுகின்றனர். உடல், மனம் இரண்டையும் உறுதி செய்யவும் வேண்டுகின்றனர்.


16 அடி உயரம் வீரபத்ரருக்கு தினமும் நைவேத்தியம், பால், பஞ்சாமிர்த அபிஷேகம், மஹா மங்களாரத்தி ஆகியவை செய்யப்படுகின்றன. அப்போது, 16 அடி உயர வீரபத்ரரை பார்ப்பதே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.


பிரம்மோத்சவம் அன்று 11 நாட்கள் சிறப்பு பூஜை நடக்கும். அப்போது, கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதை தவிர மஹா சிவராத்திரி, கார்த்திகை மாதங்களிலும் கூட்டம் அதிக எண்ணிக்கையில் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !