உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருண்மொழீஸ்வரம் மற்றும் ராஜராஜன் பெயரில் சிவலிங்கம் கண்டெடுப்பு

அருண்மொழீஸ்வரம் மற்றும் ராஜராஜன் பெயரில் சிவலிங்கம் கண்டெடுப்பு

புதுக்கோட்டை; புதுக்கோட்டை அருகே ராஜராஜன் பெயரில் இருந்த சிவலிங்கத்தை, தொல்லியல் வல்லுனர்கள் கண்டெடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், குளத்துார் அருகே செனையக்குடியில் சோழர் கால கலைப்பாணியிலான சைவம், வைணவம், சமணம் என, மூன்று மதங்களுக்குரிய சிற்பங்கள், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர், கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.தொல்லவியல் துறை ஆய்வாளர் மணிகண்டன் கூறியதாவது: செனையக்குடி மடை கல்வெட்டில், இந்த ஊரின் பெயர் தானையிக்குடி என, பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்திய கல்வெட்டுகளில், சேனையக்குடி என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேனையக்குடி என்ற பெயர்தான், பின்னாளில் செனையக்குடி என்று மருவியுள்ளது. இங்கிருந்த சிவன் கோவில் அருண்மொழீஸ்வரம் என்று, ராஜராஜனின் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது என்பது, கல்வெட்டு சான்றுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ராஜராஜன் பெயரிலிருந்த சிவன் கோவில் தான், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள லிங்கத்துடன் கூடிய சிவன் கோவில் என்பதை உறுதி செய்ய முடிகிறது. இந்த கோவில் கட்டுமானம், சிற்பங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, பன்னிரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !