பெருமாள் கோவிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி; அபிஷேகத்தின் போது நிறம் மாறிய பால்.. பக்தர்கள் பரவசம்
அவிநாசி; அவிநாசி அடுத்த கருவலூரில் 1800 ஆண்டுகள் பழமையான கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் சூரிய ஒளி பெருமாள் மீது விழுந்தது.
அவிநாசி தாலுகா,கருவலூரில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலின் தல சிறப்பு பெருமாள் நின்ற கோலத்தில் எட்டடி உயரத்தில் காட்சியளிப்பது ஆகும். இந்தியாவிலேயே கருணாகர பெருமாள் என்று அழைக்கப்படும் பெருமாள் தலம் இது ஒன்றுதான். நவபாஷாணத்தால் உருவான பெருமாளும், தேவியரும் காட்சியளிக்கும் தலமாக உள்ளது. அவிநாசி திருத்தலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி முதலை உண்ட பாலகனை மீட்க வறண்ட தாமரைக் குளத்தில் நீர் நிரப்புமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறார். கருமேகம் சூழ மகாதேவன், மகாவிஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளும் எழுந்தருளினர். தலையில் கங்கையுடன் பார்வதி சமேதரராக கங்காதரன் எழுந்தருளி கங்கையை இறக்கி விட்டார். அந்த வெள்ளம் நல்லாற்றில் பெருகிச்சென்று தாமரை குளத்தை அடைந்தது. நீர் பெருக்கில் தோன்றிய முதலை பின்னர் பாலகனை உமிழ்ந்தது. இந்நிகழ்ச்சி நடப்பதற்காக கருவில் இருந்து மழை பொழிந்த காரணத்தால் இவ்வூர் கருவலூர் என பெயர் பெற்றது.
இங்குள்ள நல்லாற்றில் நீராடி கங்காதேஸ்வரரை வழிபட்ட காமதேனு இறைவன் அருளால் கருவை சுமந்து கன்றை ஈன்றதால் கருவலூர் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மும்மூர்த்திகளும் எழுந்தருளிய இத்தலத்தின் மகிமை உணர்ந்த வீர ராஜேந்திர சோழன் கிபி 1226ம் ஆண்டில் சோழர் மற்றும் விஜயநகர நாயக்கர் கால கட்டடக்கலையுடன் இணைந்து இங்குள்ள பெருமாளுக்கு கோவில் எழுப்பினார். கல்வெட்டுகளில் வீர ராஜேந்திர விண்ணகரம் என ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை,காலை 6.30 மணியிலிருந்து 6.55 மணிக்குள் பெருமாள் மீது சூரிய ஒளி விழுகின்றது. நவபாஷாணங்களால் உருவாக்கப்பட்ட பெருமாள் மற்றும் தேவியர் மீது அபிஷேகத்தின் போது ஊற்றப்படும் வெள்ளை நிறப் பால் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. புரட்டாசி இரண்டாம் நாளான நேற்று காலை 6 .33 மணியளவில் சூரிய ஒளி மெல்ல மெல்ல எழுந்து பெருமாள் மீது பரவத் தொடங்கியது. இதனைக் காண காத்திருந்த பக்தர்கள்,சூரிய ஒளியில் பெருமாள் தங்க நிறத்தில் ஜொலித்ததை கண்டதும் "கோவிந்தா "வெங்கடேசா என கோசமிட்டனர்.