சபரிமலையில் காணாமல் போன 4 கிலோ தங்கம்; விசாரணை நடத்த உத்தரவு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலின் துவாரபாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் 4 கிலோ தங்கம் காணாமல் போன விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம், தேவசம்போர்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மூன்று வாரங்களுக்குள் முழுமையான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில் உள்ள துவார பாலகர் சிலைகளில் இருந்து 4 கிலோ தங்கம் காணாமல் தொடர்பாக 3 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐய்யப்பன் கோயில் சன்னதி முன்பு உள்ள 2 துவார பாலகர் சிலைகள் மீது தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தன. அந்தச் சிலைகளின் தங்க முலாம் தகடுகளை பழுது நீக்க ஆணையரிடம் அனுமதி பெறாமல் கோயில் நிர்வாகிகள் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், துவாரபாலகர் சிலைக்கு தங்கத் தகடு பதிக்க 42 கிலோ தங்கம் வழங்கப்பட்ட நிலையில் 38 கிலோ மட்டுமே இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம், தேவசம்போர்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. 4 கிலோ தங்கம் காணாமல்போனது பற்றி விசாரித்து 3 வாரங்களில் அறிக்கை அளிக்க தேவசம் விஜிலென்ஸ் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்க முலாம் பூசுவதற்காக எடுக்கப்பட்டபோது 42 கிலோவாக இருந்த தகடுகள், திருப்பி அனுப்பியபோது 4 கிலோ குறைந்தது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.