புரட்டாசி முதல் சனிக்கிழமை; தொண்டாமுத்தூர் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொண்டாமுத்தூர் அரங்கநாதர் கோவிலில், இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, திருமஞ்சனம், அபிஷேக ஆராதனை நடந்தது. பகல், 12:00 மணிக்கு, உச்சிக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து, 12:30 மணிக்கு, அரங்கநாத பெருமாள் திருவீதி உலா நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, பால் பூஜை, பள்ளி கொள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல, வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோவில், பொம்மணம்பாளையம் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், சுண்டபாளையம் வரதராஜ பெருமாள் கோவில், கொங்கு திருப்பதி கோவில் என, அனைத்து பெருமாள் கோவில்களிலும், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.