உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்கா பிரதிஷ்டையுடன் நவராத்திரி வழிபாடு துவங்கிய வட மாநிலத்தினர்

துர்கா பிரதிஷ்டையுடன் நவராத்திரி வழிபாடு துவங்கிய வட மாநிலத்தினர்

பல்லடம்;  பல்லடம் அருகே, வடமாநில குடும்பத்தினரின் நவராத்திரி வழிபாடு, துர்கா பிரதிஷ்டையுடன் இன்று துவங்கியது.


கோவை மாவட்டம், சூலூரில் வசிக்கும் வடமாநில குடும்பத்தினர் இணைந்து, ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடி வருகின்றனர். பல்லடத்தை அடுத்த, காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி வழிபாடு கொண்டாடப்படுகிறது. இன்று காலை, நவராத்திரியை முன்னிட்டு சிலை பிரதிஷ்டை செய்யும் பணி துவங்கியது. இதை முன்னிட்டு, காரணம்பேட்டை பெருமாள் கோவிலுக்கு வந்த வட மாநில குடும்பத்தினர், அங்கு வழிபட்ட பின், பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களுடன் ஊர்வலமாக வந்தனர். செண்டை மேளங்கள் முழங்க, நடனமாடியபடி வந்த வடமாநிலத்தினர், காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவிலுக்கு வந்தனர். அங்கு, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. அருகே அமைக்கப்பட்ட கூடாரத்தில், விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் துர்கை உள்ளிட்ட சிலைகளின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பு பூஜைகள், வேள்வி வழிபாடுகள் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் அசிம் குமார் ஓஜா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !