கோவில்களில் நவராத்திரி விழா; பல்வேறு அலங்காரத்தில் அம்மன்
கடம்பத்துார்; கடம்பத்துார் திரவுபதி அம்மன் கோவிலில், 91ம் ஆண்டு விஜயதசமி மற்றும் 52ம் ஆண்டு நவராத்திரி விழா நாளை துவங்குகிறது.
கடம்பத்துார் திரவுபதி அம்மன் கோவிலில், இந்த ஆண்டு விஜயதசமி மற்றும் நவராத்திரி விழா, நாளை முதல் வரும் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி திருவிழாவான ஒன்பது நாட்களும், பல்வேறு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார். 10ம் நாள் திருவிழாவான அக்., 2ம் தேதி காலை 9:00 மணியளவில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். வரும் 5ம் தேதி விடையாத்தி உற்சவத்துடன் நவராத்திரி விழா நிறைவு பெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
திருக்கல்யாணம்; கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துார் கிராமத்தில் அமைந்துள்ள ஏகாத்தம்மன் கோவிலில், 45வது நவராத்திரி பெருவிழா, நேற்று துவங்கி வரும் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாளை இரவு 8:00 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும். வரும் அக்., 2 ம் தேதி விடையாத்தி உற்சவமும், ஆண்டாள் ஊஞ்சல் சேவையுடன், நவராத்திரி விழா நிறைவு பெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அதேபோல், பொதட்டூர்பேட்டை பொன்னியம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா நடைபெற்றது. இதில், காயத்ரி அலங்காரத்தில் பொன்னியம்மன் அருள்பாலித்தார்.