அயோத்தியில் நவராத்திரி விழா; ராமர், ஜகத்ஜனனி துர்கா தேவிக்கு சிறப்பு வழிபாடு
அயோத்தி; அயோத்தி ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராம்லல்லா சர்க்கார் மற்றும் ஜகத்ஜனனி மா துர்கா ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.அயோத்தியில், ஸ்ரீ ராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜனவரியில் நடந்த விழாவில், பால ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் பால ராமரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தாண்டு நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு ராமருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. இன்று நடைபெற்ற வழிபாட்டில் ஜகத்ஜனனி துர்கா தேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ராமர், துர்கா தேவியை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். நவராத்திரி திருவிழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்காக அயோத்தி நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.