ஆரோவில் ராஜராஜேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா; மகா நவாவரண பூஜை
வானுார்; ஆரோவில் மெயின் ரோட்டில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட ஆரோவில் மெயின் ரோட்டில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி, கடந்த 22ம் தேதி நவராத்திரி வழிபாடு துவங்கியது. வரும் அக்., 2ம் தேதி வரை நாள்தோறும் மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நவராத்திரி உற்சவம் மற்றும் மகா நவாவரண பூஜைகள் நடக்கிறது. நேற்று, மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி நேற்று வில்லியனுார் நாட்டிய சாஸ்திராலயா இசை மற்றும் நடன பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய இசை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர். நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகி சுஜாதா மோகனசுந்தரம், புதுச்சேரி மத்திய சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், நாட்டிய சாஸ்திராலயா ஆசிரியர்கள் உமா, மாதவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.