ராஜகீழ்ப்பாக்கம் நவராத்திரி மகோத்சவத்தில் சஹஸ்ர சண்டி ஹோமம்
சேலையூர்; ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடந்த நவராத்திரி மகோத்சவத்தில், இன்று சஹஸ்ர சண்டி ஹோமம் நடத்தப்பட்டது.காஞ்சி மாடதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் வளாகத்தில், சாரதா நவராத்திரி மகோத்வத்தை நடத்தி வருகின்றனர். நவராத்திரி விழாவை ஒட்டி, வழக்கமான சந்திரமவுலீஸ்வரர் மூன்று கால பூஜையும், காலை மற்றும் இரவில் நவாவர்ண பூஜையும் நடத்தி வருகின்றனர். நவராத்திரிக்காக நிறுவப்பட்டிருக்கும் விசேஷ யாக சாலையில், ரிக் சம்ஹிதா ஹோமம், காமார்த்தி ஹோமம், சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. நவராத்திரி மகோத்வத்தின் ஒரு பகுதியாக, இன்று உலக நன்மை வேண்டியும், தர்ம அர்த்த காம மோட்சம் வேண்டியும், சஹஸ்ர சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நவராத்திரி மகோத்வத்தில், நாளை இரவு 7:00 மணிக்கு, பத்ம விபூஷன் டாக்டர் எல்.சுப்பிரமணியனின் வயலின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.