உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு; களை கட்டும் மலைக்கோவில்கள்

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு; களை கட்டும் மலைக்கோவில்கள்

உடுமலை; பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய புரட்டாசி சனிக்கிழமைகளில், உடுமலை சுற்றுப்பகுதி மலைக்கோவில்களில், பாரம்பரிய வழிபாடு நடத்தும் மக்களால், அக்கோவில்கள் களைகட்டியுள்ளது; இரண்டாவது சனிக்கிழமை வழிபாட்டுக்கு கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலும், சில கிராமங்களிலுள்ள குன்றுகளில் மலைக்கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. புரட்டாசி பிறந்ததும், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகம், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு இப்பகுதி மக்கள் உற்சாகமாக செல்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமே, இக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியில், மலைகளை கடந்து சென்று, ஏழுமலையானை தரிசித்தால், அவல், கரும்பு சர்க்கரை தண்ணீரை நனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். பாரம்பரியமான ஏழுமலையான் கோவில் வழிபாடு, இன்றளவும் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் சிறப்பாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதே போல், கரட்டுமடம் சஞ்சீவராய பெருமாள் கோவில்; ஜல்லிபட்டி அழகு திருமலைராய பெருமாள், செஞ்சேரிமலை சுந்தரராஜ பெருமாள், திருமூர்த்திமலை கரிவரதராஜ பெருமாள் என உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடைபெற்று வருகிறது. இக்கோவில்களில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, இன்று பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேல்கோட்டை ஸ்ரீ ஆச்சார்யா வேதபாட சாலை பொறுப்பாளர் ஆறுமுகம் கூறியதாவது: உடுமலை சுற்றுப்பகுதியில், பல மலைக்கோவில்கள் அமைந்துள்ளன. பழமை வாய்ந்த இக்கோவில்களில் தற்போது வரை புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடைபெற்று வருகிறது. தாசர்கள் சங்குநாதம் பிடித்து நம்மை வாழ்த்துகிற முறையும் பின்பற்றப்படுகிறது. கிராமங்களில், குழந்தைகளுக்கு திருநாமம் இட்டு, கையில் செம்பு கொடுத்து, நாராயண மூர்த்தி என்கிற உஞ்ச விருத்தி எடுத்து வரச்செய்கின்றனர். அந்த அரிசியில் சாதம் வடித்து பிரசாதமாக வழங்குகின்றனர். பின்னர், பெருமாளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்கின்றனர்; பஜனை பாடல்களை பாடியவாறு ஊர்வலமும் வருகின்றனர். இவ்வாறு, புரட்டாசி மாதம் முழுவதும் பாரம்பரிய வழிபாடுகள் இன்றும் தொடர்கிறது. இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !