உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துடியலூர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் வேதனை; உற்சவர் சிலை எடுக்க சிக்கல்

துடியலூர் பெருமாள் கோவிலில் பக்தர்கள் வேதனை; உற்சவர் சிலை எடுக்க சிக்கல்

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே பன்னீர்மடையில் ஒரே கோவில் வளாகத்தில் உள்ள மூன்று கோவில்களுக்கு தனி, தனி செயல் அலுவலர்கள் இருப்பதால், விழா நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பெருமாள் கோயில் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.துடியலூர் அருகே பன்னீர்மடையில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இடிந்து, பராமரிப்பின்றி கிடந்த இக்கோவிலை பன்னீர்மடை பக்தர்கள் ஒன்று கூடி புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த, 2023ம் ஆண்டு இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கிருஷ்ணசாமி கோவில் வளாகத்திலேயே கிருஷ்ணசாமி கோவில், உலகளந்த பெருமாள், செல்வ விநாயகர் கோவில் உள்ளன. மூன்று கோவில்களுக்கும் தனித்தனியாக செயல் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர். இதில், கிருஷ்ணசாமி கோவில், உலகளந்த பெருமாள் செல்வ விநாயகர் கோவில்களுக்கு சொந்தமான உற்சவர்கள் ஒரே அறையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் விசேஷ நாட்களில், ஏதாவது ஒரு தெய்வத்துக்கு உண்டான உற்சவர் சிலையை எடுக்க, மூன்று செயல் அலுவலர்களிடமும் அனுமதி பெற வேண்டி உள்ளது. இதற்கு செயல் அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அனுமதி வழங்குவதில்லை. இதனால் குறித்த நாள் மற்றும் நேரத்தில் உற்சவர்களை கொண்டு திருவீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என கிருஷ்ணசாமி கோவில் மற்றும் உலகளந்த பெருமாள் கோவில் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இது குறித்து, பன்னீர்மடை இறைவழிபாடு மன்ற செயலாளர் மோகன்ராஜ் கூறுகையில்," கிருஷ்ணசாமி கோவில், 300 ஆண்டுகள் பழமையானது. கோவிலுக்கு சொந்தமாக, 30 ஏக்கர் பூமி உள்ளது. கடந்த, 2023ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் கும்பாபிஷேக விழா நடந்தது. தமிழக அரசோ, இந்து சமய அறநிலைத்துறையோ எவ்வித நிதி உதவியும் வழங்கவில்லை. கிருஷ்ணசாமி கோவில் அருகே உள்ள உலகளந்த பெருமாளுக்கு, 60 ஏக்கர் நிலம் உள்ளது. செல்வ விநாயகர் கோவிலுக்கு, 3 ஏக்கர் பூமி வாயிலாக குத்தகை வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணசாமி கோவிலில் பாமா, ருக்மணி தாயார்களுடன் உற்சவர், பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் உலகளந்த பெருமாள் உற்சவர் ஆகியன ஒரே அறையில் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது உற்சவர் சிலை எடுக்க கிருஷ்ணசாமி கோவில் செயல் அலுவலரை பலமுறை நேரில் அணுகியும், கடிதம் கொடுத்தும் அனுமதி கிடைக்கவில்லை. இதே போல உலகளந்த பெருமாள் கோவில் இந்து சமய அறநிலை துறை ஆய்வாளருக்கும் அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டால், அதிகாரிகள் போனை எடுப்பதில்லை. விழா நடக்கும் நேரங்களில் கோவிலுக்கு செயல் அலுவலரோ, ஆய்வாளரோ வருவதில்லை. கோவிலில் பூஜை செய்யும் அய்யர்களுக்கு மாதம், 2500 ரூபாய் சம்பளம், மின்சார கட்டணம் இவை மட்டுமே இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செலுத்தப்படுகிறது. கடவுளுக்கு விசேஷ நாட்களில் மலர்மாலை கூட வாங்கி கொடுப்பதில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த கருட சேவை நிகழ்வில் இதே பகுதியில் உள்ள இன்னொரு பெருமாள் கோவிலில் இருந்து உற்சவர் எடுத்து விழா நடத்தினோம். விழா காலங்களில் அந்தந்த கோவில்களில் உள்ள உற்சவர் சிலைகளை எடுக்க இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !