உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அவதி

ஸ்ரீமுஷ்ணம் கோவிலுக்குள் மழைநீர்: பக்தர்கள் அவதி

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்து உள்பிரகாரம் சேறும் சகதியுமானதால், பக்தர்கள் அவதியடைந்தனர்.


கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்தி பெற்ற பூவராகசுவாமி கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், கடை வீதி மற்றும் கழிவு நீர் கால்வாய்களில் இருந்து அதிகளவு மழை நீர்  வெளியேறியது. இந்த மழை நீர் பூவராக சுவாமி கோவிலின் முன்புறம் உள்ள பிரதான வாயில் வழியாக கோவிலுக்குள் புகுந்தது. இதனால், பக்தர்கள் அவதியடைந்தனர். மழை காலங்களில் கோவிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்ட வடிகால் மூலம் மழை நீர் வடிந்து கோவிலுக்குள் செல்லாமல் இருக்கும். கோவிலுக்குள் தேங்கும் மழைநீர் கோவிலின் வடக்கு பகுதியில் உள்ள வடிகால் மூலம் வெளியேறிவிடும். ஆனால், நேற்று பெய்த கன மழை காரணமாக அதிகளவில் தண்ணீர் உள்ளே புகுந்து கோவில் வளாகத்தில் இருக்கும் குழந்தையம்மன் சன்னதி பகுதியில் முழங்கால் அளவிற்கு தேங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அதிக மழை பெய்யும் போது, கோவிலுக்குள் மழை நீர் தேங்குவது தொடர்கதையாக உள்ளன. நீண்ட காலமாக உள்ள இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மழை நீர் வடிகாலை துார்வார வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !