வலசைபட்டி முத்தாலம்மன் கோயில் சாத்திரைத் திருவிழா
எஸ்.புதுார்; எஸ்.புதுார்அருகே வலசைபட்டி முத்தாலம்மன் கோயிலில் சாத்திரை திருவிழா நடந்தது. இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா செப். 23 ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து அக். 5 ல் கிராமத்தினர் சார்பில் பிடிமண் கொடுக்கப்பட்டு அம்மன் உருவம் செய்யப்பட்டது. முசுண்டபட்டியில் இருந்து அம்மன்சிலை பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக வலசைபட்டிக்கு அழைத்து வரப்பட்டு, தங்க ஆபரணங்கள் சாத்தப்பட்டது. அக். 7 ம் தேதி ஏராளமான பெண்கள் தீபம் ஏற்றியும் மாவிளக்கு எடுத்தும், ஆண்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியும் கோயிலை மூன்று முறை வலம்வந்து அம்மனை வழிபட்டனர். பிறகு முத்தாலம்மன், சப்பரத்தில் ராஜாப்பட்டிக்கு எழுந்தருளி மீண்டும் ஊர் திரும்பினார். விழாவில் வலசைபட்டி, இரணிபட்டி, முசுண்டப்பட்டி, ராஜாபட்டி, அம்மாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.