திருப்பதி போல தமிழக கோவில்களில் ஆன்லைன் முன்பதிவு தரிசனம் வசதி; அரசுக்கு நோட்டீஸ்
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழக கோவில்களின் நிலத்தை மீட்க, கோவில் சொத்துக்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வுபெற்ற நீதித்துறை அதிகாரிகள், அறிவு ஜீவிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை கொண்ட குழுவை அமைக்க வேண்டும். கோவில் நில வாடகை, குத்தகை, மக்கள் செலுத்தும் பூஜை கட்டணத்தை ஆன்லைனில் வசூலிக்க வேண்டும். கோவில் நிலம் மற்றும் சொத்துக்களை தனி நபர்களின் பெயருக்கு சாதகமாக மாற்றக்கூடாது.
கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நெரிசல் ஏற்படுகிறது. சபரிமலை, திருப்பதி கோவில்களில் உள்ள தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முறை மூலம் எவ்வித தொந்தரவும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யலாம். ஊழியர்கள் பணம் வசூலித்து தரிசனம் செய்ய அனுமதிக்கும் முறைகேடுகளை தவிர்க்கலாம். தமிழகத்தின் முக்கிய கோவில்களில் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜரானார். நீதிபதிகள் தமிழக அறநிலையத்துறை செயலர், கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, நவ., 12க்கு ஒத்திவைத்தனர்.