புரட்டாசி நான்காம் சனி; திக்குமுக்காடும் திருப்பதி.. 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமை என்பதால் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் நான்காம் சனிக்கிழமை ஒட்டி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. இதனால் இலவச தரிசனத்தில் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதால் கிருஷ்ணதேஜா ஓய்வறை வரை அமைக்கப்பட்டுள்ள 2 கிலோ மீட்டருக்கான வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் சராசரியாக இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 300 ரூ சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரமும், திருப்பதியில் வழங்கப்படும் இலவச சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வரிசையில் உள்ள பக்தர்களுக்கும், தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத கூடத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ள இடத்தில் சிறப்பு கவுண்டர் மூலம் தொடர்ந்து சாம்பார் சாதம், உப்புமா, காபி, பால் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை ஒரே நாள் 74468 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் ரூ 3.86 கோடி காணிக்கையாக செலுத்தி இருந்தது குறிபிடத்தக்கது.