தமிழக பக்தர்களுக்கு புதிய வசதி: காசியில் 10 மாடி கட்டடம் தயார்!
காசி: உ லகில் உள்ள அனைத்து ஹிந்துக்களுக்கும், வாழ்க்கையில் ஒருமுறையாவது புனித இடமான காசிக்கு சென்று கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு வர வேண்டும் என்ற ஆசை உண்டு. இங்கு, தமிழர்கள் தங்குவதற்கு பல மடங்கள் உள்ளன. தற்போது புதிய, 10 மாடி கட்டடம் ஒன்று, நாட்டுக்கோட்டை செட்டியார்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில், இந்த புதிய சத்திரத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். 2003லேயே இங்கு கட்டடம் கட்ட திட்டமிட்டாலும், இந்த இடம் சமாஜ்வாதி கட்சியினர் சிலரின் ஆக்கிரமிப்பில் இருந்தது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடைய முயற்சியால், இந்த இடம் மீட்கப்பட்டு, 2024ல் கட்டட வேலைகள் துவங்கப்பட்டன.
காசிக்கு வரும் தமிழர்கள் மட்டுமன்றி, தென் மாநிலத்தவ்ர் அனைவரும் இங்கு தங்கலாம். ஏற்கனவே காசியில் நகரத்தாரின் சத்திரம் உள்ளது. கிட்டத்தட்ட, 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய சத்திரத்தில் 135 அறைகள், டார்மெட்ரி, உணவு ஹால் என, பல வசதிகள் உள்ளன. இந்த இடத்தை மீட்டுக் கொடுத்து, பிரமாண்டமான கட்டடம் வர உதவிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசியம் திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என, நாட்டுக்கோட்டை நகர சத்திரம் மேனேஜிங் சொசைட்டி தலைவர் நாராயணன் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் தொகுதியான, காசியில் நடக்கும் இந்த கட்டட திறப்பு விழாவில், பிரதமர், உ.பி., முதல்வர் யோகி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா ஆகியோர் பங்கேற்கின்றனர்.