உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லை கூத்தரே நடராஜரே கோஷத்துடன் சிதம்பரம் நடராஜர் தேரோட்டம்!

தில்லை கூத்தரே நடராஜரே கோஷத்துடன் சிதம்பரம் நடராஜர் தேரோட்டம்!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நேற்று நடந்த தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன உற்சவம், கடந்த, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய உற்சவமான திருத்தேரோட்டம், நேற்று நடந்தது. காலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்க நகைகள் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சிற்சபையிலிருந்து புறப்பாடு செய்யப்பட்டு சிற்சபை உலா நடந்தது. காலை, 7:00 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டு, 7:30 மணிக்கு விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து முருகர் தேர் சென்றது. சப்-கலெக்டர் சுப்ரமணியன் உட்பட பலர், காலை, 8:00 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பக்தர்கள், "தில்லை கூத்தரே... நடராஜரே என, கோஷம் எழுப்பி, திருத்தேரை இழுத்துச் சென்றனர். தொடர்ந்து சிவகாம சுந்தரி அம்மன் தேரோட்டம் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் சென்றது. மாலை, தேர் நிலைக்கு வந்ததும், சிவகாம சுந்தரி சமேத நடராஜர், ராஜ சபை ஆயிரங்கால் மண்டப முகப்பில் எழுந்தருளச் செய்யப்பட்டு, இரவு, 8:00 மணிக்கு விசேஷ லட்சார்ச்சனை நடந்தது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமிக்கு விசேஷ மகா அபிஷேகம் நடக்கிறது. 10:00 மணிக்கு சிற்சபையில் ரகசிய பூஜை நடத்தப்பட்டு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து, தீர்த்தவாரி நடக்கிறது. மதியம், 2:00 மணிக்கு, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் நடனம் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !