துணை ஜனாதிபதிக்கு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேகம்,தீபாராதனைகள் நடைபெற்று துணை ஜனாதிபதிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
காசியில் வாசி அவிநாசி என்ற புகழ்பெற்றதும், கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவர் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு 16 வகையான திரவியங்களில் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று அலங்காரம் செய்யப்படும். அதில் மாதந்தோறும் முன்னாள் மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணனுக்கு சிறப்பு வழிபாடு அர்ச்சனைகள் நடைபெறுவது வழக்கம். தற்போது துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு தேய்பிறை அஷ்டமியில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பெயருக்கு அர்ச்சனை மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டது. பின்னர் பிரசாதத்தை கோவில் குருக்கள் சிவக்குமார் சிவாச்சாரியார் ,நேற்று மாலை டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் இந்திய துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து பிரசாதத்தை கோவில் சார்பில் வழங்கினார். பின்னர் துணை ஜனாதிபதிக்கு பரிவட்டம் கட்டி கோவில் தலபுராணம் மற்றும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் உள்ள புகைப்படம் அடங்கிய போட்டோ பிரேம் சிவக்குமார் சிவாச்சாரியார் சார்பில் வழங்கினார்.