திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா; சுனை தீர்த்தத்தில் 16 வகை அபிஷேகம்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று நடந்தது.
நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுப்பிரமணிய சுவாமி தனது கரத்தில் உள்ள வேல் மூலம் குன்றத்து மலை மீதுள்ள பாறையில் கீரி கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கிய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும் கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்தில் உள்ள தங்கவேல் மலை மேல் கொண்டு செல்லும் விழா இன்று நடந்தது. இன்று காலை மூலவர் சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள வேலுக்கு கிராமத்தினர் சார்பில் சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. சிறப்பு பொதுபூஜை முடிந்து, கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டது. வேல் பல்லக்கில் வீதி உலா சென்று மலை மேல் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சுப்ரமணியர் கரத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சுனை தீர்த்தத்தின் மேல், மலை பாறையின் அடிவாரத்திலுள்ள காசி விசுவநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து கோயில் சிவாச்சாரியார்கள் தங்கவேலை சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் சென்று பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட 16 வகை திரவிய அபிஷேகங்கள் செய்தனர். கிராமத்தினர் சார்பில் 120படி அரிசியிலான கதம்ப சாதம், பாயாசம் பிரசாதம் வழங்கப்பட்டது. வழக்கமாக 105 படியில் பிரசாதம் வழங்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக பிரசாதம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் வேல் புறப்பாடாகி மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, இரவு வேல் மற்றும் சுவாமிக்கு அபிஷேகங்கள், தீபாராதனை நடக்கும். அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, கோயில் கண்காணிப்பாளர்கள் ரஞ்சனி, சத்தியசீலன், சுமதி, தி.மு.க., தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலாஜி பங்கேற்றனர். வேல் மலைமேல் செல்லும் விழாவிற்காக கோயிலில் கருப்பண சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியானது.