மடப்புரம் கோயிலில் சேலை ஏலம், போட்டி போட்டு எடுத்த பெண்கள்
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ஏராளமான பெண்கள் குவிந்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மனை தரிசனம் செய்ய தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அம்மனுக்கு நேர்த்தி கடனாக பக்தர்கள் சேலைகள் வாங்கி சார்த்துவது வழக்கம். பக்தர்கள் வழங்கிய சேலைகளை வாரம்தோறும் வெள்ளி கிழமை கோயில் வளாகத்தில் அதிகாரிகள் ஏலம் விடுவார்கள். பூனம், காட்டன், சுங்கடி, பட்டு சேலைகள் ரூபாய் 100 முதல் 500 வரை தொடங்கி சேலையின் மதிப்பிற்கு ஏற்ப ஆயிரக்கணக்கில் ஏலம் விடுவார்கள். தமிழகத்தில் வரும் 20ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ளதால் பெண்கள் ஆர்வமுடன் சேலைகள் வாங்க குவிந்தனர். 300க்கும் மேற்பட்ட சேலைகள் நேற்று விற்பனை செய்யப்பட்டன.
பக்தர்கள் கூறுகையில் : திருநாள் அன்று அம்மன் சேலைகளை உடுத்துவது மன நிம்மதியை அளிக்கும் என்பதால் ஏலத்தில் சேலைகள் வாங்கினோம், என்றனர்.
அதிகாரிகள் கூறுகையில் : வழக்கமாக 100 சேவைகள் வரை விற்பனையாகும், தீபாவளி திருநாள் வருவதால் 300க்கும் மேற்பட்ட சேலைகள் விற்பனையாகின, என்றனர்.