சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக திருச்சூர் பிரசாத் தேர்வு
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, கார்த்திகை மாதம் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு வருவர். இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நெருங்கும் நிலையில், அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தி தேர்வு நடந்தது. நேற்று முன்தினம் துலாம் மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று காலை உஷ பூஜை முடிந்து மேல்சாந்தி தேர்வுக்கான குலுக்கல் நடந்தது. சபரிமலை உள்ளிட்ட முக்கிய கோவில்களை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் முன்னிலையில் பந்தள அரச வம்சத்தை சேர்ந்த இரு குழந்தைகள் குலுக்கல் சீட்டு வாயிலாக புதிய மேல்சாந்தியை தேர்வு செய்தனர்.
இதில் சபரிமலை அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்த பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஓராண்டு இந்த பொறுப்பை வகிப்பார். இவர் தற்போது ஆரேஸ்வரம் தர்மசாஸ்தா கோவில் பூசாரியாக உள்ளார். இதை தொடர்ந்து, மாளிகாபுரம் கோவில் மேல் சாந்தியாக கொல்லம் மாவட்டம் மய்யநாட்டை சேர்ந்த மனு நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். அய்யப் பன் கோவில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசாத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப் பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. வி ரைவில் அய்யப்பன் கோவிலுக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறேன்,’’ என்றார்.