சேரும் சகதியுமாக மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் வழித்தடம் சூரசம்ஹாரத்துக்கு தயாராகுமா?
பல்லடம்; சேரும், சகதியமாக உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் வழித்தடம், சூரசம்ஹார விழாவுக்கு முன் தயார்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில், பல்லடம் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றது. குன்றின் மேல் அமைந்திருக்கும் இக்கோவிலில், வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்ந சஷ்டி உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் விமர்சையாக கொண்டாடப்பட்ட வருகின்றன. இவ்விழாக்களின்போது, பல்லடம் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். அவ்வகையில், தற்போது கந்த சஷ்டி விழா துவங்கி நடந்து வருகிறது. நாளை மறுநாள், சூரசம்ஹார நிகழ்ச்சி மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளன. அதில், பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில், கோவில் நுழைவு வாயில் முதல் கோவில் வரையிலான வழித்தடம், தொடர் மழை காரணமாக, சேரும் சகதியமாக உள்ளது. பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, இந்த வழித்தடத்தில் ரோடு போட வேண்டும் என்பது நீண்ட காலம் எதிர்பார்ப்பு. தொடர் மழை பெய்து வருவதாலும், வழித்தடம் சேரும் சக அதிகமாக இருப்பதாலும், பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாவார்கள் என்பதால், சூரசம்ஹார நிகழ்வுக்கு முன், வழித்தடத்தை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும். எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற சிக்கல் ஏற்படாத வகையில், வழித்தடத்தில் ரோடு வசதி ஏற்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.