கழுகாசலமூர்த்தி கோவிலில் தாரகாசூரனை வதம் செய்த முருகன்
துாத்துக்குடி: -தென் பழனி என அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் நடந்த சம்ஹார நிகழ்ச்சியில் தாரகாசூரனை முருக பெருமான் வதம் செய்தார்.
துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில், குடைவரைக் கோவிலான கழுகாசலமூர்த்தி கோவில் உள்ளது. தென்பழனி என அழைக்கப்படும் இந்த கோவிலில், கந்தசஷ்டி விழா அக்., 22 ம் தேதி துவங்கியது. ஐந்தாம் விழாவான நேற்று சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை முருக பெருமான் வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சி நடந்தது. சம்ஹாரத்துக்காக, சுவாமி வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, துாது சென்ற வீரபாகுவை சூரர்கள் சிறைபிடித்தனர். அவரை மீட்க சுவாமி வீரவேல் ஏந்தி மயில் வாகனத்தில் போர்க்களத்தை அடைந்தார். கோவிலில் இருந்து சுவாமி சார்பில் நாரதர் முருகாற்றுப்படை பாடல்கள் பாடியபடி சூரபத்மனிடம் மூன்று முறை துாது சென்றார். சமரசம் ஏற்படாததை தொடர்ந்து தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி கழுகாசலமூர்த்தி தாரகாசூரனை சம்ஹாரம் செய்தார். பக்தர்கள் “வெற்றி வேல், வீர வேல்” என கோஷங்கள் எழுப்பினர்.பின்னர், கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, ஆறாம் நாளான இன்று (அக். 27) மாலை 5:00 மணியளவில் சூரபத்மனை முருகர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.