மூன்று தலைமுறைகளாக சூரர் வாகனங்களை செய்து தரும் கலைக்கூடத்தினர்.
அவிநாசி; கந்த சஷ்டி சூரசம்காரத்திற்காக அவிநாசியில் தனித்துவமாக செய்யப்படும் சூரர் வாகனங்கள். அவிநாசி மங்கலம் ரோட்டில் உள்ள மகா நகரில் ஸ்ரீ தேவி வாகன கலைக்கூடம் நடத்தி வருபவர் அங்கு ராஜ் 51. மூன்று தலைமுறைகளாக,கோவிலில் சாமிகள் திருவீதி உலா வரும் சப்பரத்தில் உள்ள வாகனங்களை செய்து வரும் கலைத்தொழில் செய்து வருகின்றனர். தற்போது கோவை, ஈரோடு,நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சப்பரத்தில் வைக்கப்படும் வாகனங்களை செய்து வரும் ஒரே கலைக்கூடம் இவரது மட்டுமே. அந்த வகையில் ஊத்துக்குளியில் உள்ள முருகர் கோவிலுக்கு கந்த சஷ்டி சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கடந்த மூன்று மாத காலமாக கஜமுக சூரன்,சிங்கமுகம்,பானு கோபன், சூரபத்மன் ஆகிய சூரர் வாகனங்களை செய்து அனுப்பியுள்ளார். அதிலும் குறிப்பாக இந்த சூரர் வாகனங்கள் அனைத்தும் மூங்கில் மற்றும் சணல் பைகள் கொண்டு செய்யப்பட்டவை ஆகும். சூரர்களின் தலை காகிதம்,துணி மற்றும் சணல் பை ஆகியவற்றை கூழாக்கி அச்சில் வார்த்து எடுத்து செய்கின்றார். இதுவரை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், கருமத்தம்பட்டி சென்னி ஆண்டவர் கோவில்,குமரன் குன்று,திருமுருகன் பூண்டி, கயித்த மலை, ஊத்துக்குளி முருகர் கோவில்,திருப்பூர் ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களுக்கு வாகனங்கள் செய்து கொடுத்துள்ளதாக அங்குராஜ் தெரிவித்தார்.