கோவை அருகே சத்பூஜை கொண்டாட்டம்; திரளான பெண்கள் பங்கேற்பு
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே பன்னிமடையில் நடந்த சத் பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று, இறைவனை வழிபட்டனர்.
பன்னிமடையில் உள்ள கீதா கிருஷி கேந்திராவில், ஆதர்ஷ் உத்தரப்பிரதேசம் சமாஜ் இந்த பூஜையை நடத்தியது. சத் பூஜையின் மூன்றாம் நாள் பக்தர்களும், நோன்பு நோற்பவர்களும் மிக முக்கிய நாளாக கருதுகின்றனர். இந்நாளில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்து, தங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி, செழிப்புக்காகவும், தங்கள் குழந்தைகளின் நீண்ட நாள் ஆயுளுக்காகவும், வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என சூரிய பகவானையும், சத் மாயாவை பிரார்த்தனை செய்வார்கள். இந்நாளில் மாலை நேரத்தில் சூரிய கடவுளுக்க நீரில் நின்று, தண்ணீரை காணிக்கையாக செலுத்தி, வழிபடுவது நல்ல பலன்களை தரும் என்பது நம்பிக்கை. நிகழ்ச்சியில் தலைவர் ராஜ்குமார் சஹானி அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர் அனீஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் பவன் சவுராசியா, பொருளாளர் சச்சின், முன்னாள் தலைவர் மனேஸ்வர்சிங், நிர்வாக உறுப்பினர் முகேஷ் சுக்லா, சஞ்சய் குமார் துபே, சுனில் சிங், அனில் சிங் மற்றும் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உ.பி., பீகார் மற்றும் ஜார்கண்டிலிருந்து குடியேறிய இந்தி பேசும் மக்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.