கரும்பு, வாழையில் அலங்காரம்; கந்த சஷ்டி விழாவில் அபாரம்!
பல்லடம்; கரும்பு மற்றும் வாழை மரங்களால் தோரணங்கள், அலங்கார வளைவுகள் உருவாக்கப்பட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா அபாரமாக நடந்தது.
ஹிந்து கடவுளான முருகனின் விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் முக்கியமானது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடக்கும் இந்த விழா, முருகன் கோவில்களில், சூரசம்ஹார நிகழ்வுடன் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு, பல்லடத்தில் பிரசித்தி பெற்ற மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, விழா முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக, கோவில் நுழைவு வாயில், திருக்கல்யாண மண்டபம், சன்னதிக்குச் செல்லும் வழி, கோவில் கருவறை உள்ளிட்ட பகுதிகளில், கரும்பு மற்றும் வாழை மரங்களால் ஆன தோரணங்கள், அலங்கார வளைவுகள் உருவாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில், விழாக் குழுவின் இந்த செயல்பாடு மிகவும் வரவேற்கத்தக்கதாக அமைந்தது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, திருக்கல்யாணம் நடைபெறும் இடத்தில், மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது கூடுதல் சிறப்பு. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும், வாகனங்களை முறையாக பார்க்கிங் செய்ய அறிவுறுத்தியதால், பார்க்கிங் பிரச்னை ஏற்படாத்தால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
குறைகள் களையப்படுமா?; முத்துக்குமாரசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் விழாக்களின்போது கூடும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு , கடந்த இரண்டு நாட்களாக நடந்த சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது வரவேற்கத்தக்கது. ஆனால், பக்தர்கள் கை கழுவும் இடம் சேரும் சகதியுமானது. சாப்பிட்ட தட்டுகள், பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தன. காலணிகளை முறையாக வைக்க இடம் இன்றி, அரச மரத்தடி விநாயகர் அருகிலும், பல்வேறு இடங்களிலும் பக்தர்கள் விட்டு சென்றனர். இதனால், கோவில் கிரிவலப்பாதையின் பல இடங்களில் காலணிகளே அதிக அளவில் காணப்பட்டன. எனவே, காலணிகளை பாதுகாக்க இடம் அமைக்க வேண்டும். முறையான குடிநீர், கை கழுவும் வசதி ஏற்படுத்துவது அவசியம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோவிலில் சரியான கழிப்பிட வசதி கிடையாது. கோவில் நுழையும் இடத்திலேயே உள்ள கழிப்பிடமும் சரிவர பராமரிப்பது இல்லை. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்தால், எதிர்வரும் நாட்களில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதுடன், அறநிலையத்துறையின் செயல்பாடுகளை பக்தர்கள் மெச்சவும் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை.