உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா கோலாகலமாக துவங்கியது

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா கோலாகலமாக துவங்கியது

தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக துவங்கியது.


உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.  அதன்படி 1040-வது சதய விழா இன்று (அக்.31) நாளை (நவ. 1-ம் தேதி) என இரு நாட்கள் அரசு விழாவாக நடைபெறுகிறது. இதையொட்டி, அரண்மனை வளாகத்திலிருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று மாபெரும் ஊர்வலம் தொடங்கியது. இதில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பெரிய கோவில் வளாகத்தில்  400 கலைஞர்கள் ராஜராஜ சோழனுக்கு பரதநாட்டியம் ஆடி புஷ்பாஞ்சலி செலுத்தினர். 


தொடர்ந்து,தொடக்க விழாவில், மங்கல இசை  கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளுரை வழங்கினார். பின்னர் கருத்தரங்கம், கவியரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் சத்ய விழாக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து நாளை இரண்டாம் நாளாக காலை 6.30 மணிக்கு மங்கள இசை உடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதன் பின்னர் கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சியும், மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பல்வேறு கட்சி,அமைப்பு, இயக்கம்  சார்பில் மாலை அணிவிக்கின்றனர்.  காலை 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட ஓதுவா மூர்த்திகள் திருமுறை பண்ணுடன் ராஜ வீதிகளில் திருவீதியுலா நடைபெறும். இதையைடுத்து பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பிற்பகலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெறும். மாலை 4 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து தேவார பண்ணிசையும் நடைபெறும். மாலை 6 மணிக்கு சுவாமி திருவீதியுலாவும், இரவு 7 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. இரவு 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !