கள்ளழகர் கோயிலில் நுாபுர கங்கையில் நீராடிய சுந்தரராஜ பெருமாள்
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் தைலக்காப்பு உற்ஸவத்தை முன்னிட்டு மலைமீதுள்ள நுாபுர கங்கை தீர்த்தத்தில் சுந்தரராஜ பெருமாள் புனித நீராடினார்.
ஐப்பசியில் 3 நாட்கள் நடைபெறும் தைலக்காப்புத் திருவிழா, அக். 31ல் துவங்கியது. கோயில் வளாகத்தில் உள்ள மேட்டுக் கிருஷ்ணன் சன்னதியில் முதல் நாள் பரமபதநாதன் அலங்காரத்திலும், 2ம் நாள் சேஷ வாகனத்திலும் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூன்றாம் நாளான நேற்று காலை 6:45 மணிக்கு மேல், சுந்தரராஜ பெருமாள் பூப்பல்லக்கில் சகல பரிவாரங்களுடன் மலைப்பாதை வழியாக அழகர்மலைக்கு புறப்பட்டார். வழியில் உள்ள அனுமார், கருட தீர்த்த இடங்களில் சுவாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் ராக்காயி அம்மன் கோயிலில் உள்ள மாதவி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு காலை 10:35 மணிக்கு மேல் பெருமாளுக்கு தைலம் சாத்தப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் நுாபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராட வைத்து திருமஞ்சனம் நடந்தது. விசேஷஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலையில் இருப்பிடம் சேர்ந்தார். அழகர்மலை மீதுள்ள நுாபுர கங்கையில் ஆண்டுக்கு ஒருமுறை சுவாமி நீராடுவதைக் காண அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன், அறங்காவலர்கள் செய்திருந்தனர்.