கம்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் 33 அடி உயர கொடி மரத்திற்கு பாலாலயம்
கம்பம்; கம்பம் கம்பராயப் பெருமாள் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் கொடி மரத்திற்கு இன்று பாலாலயம் நடந்தது. திருப்பணிகள் செய்து கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கம்பராயப்பெருமாள், காசி விஸ்வநாதர் கோயில் மிக பழமையும் வரலாற்று சிறப்பு பெற்றது. இங்கு தனித் தனி சன்னதிகளில் சிவனும், பெருமாளும் எழுந்தருளியுள்ளனர். கிரீடம் இல்லாத ஆஞ்சநேயர், கமண்டலத்துடன் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி , சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு பின் நான்கு கைகளில் சக்கரங்களுடன் நரசிம்மர் இருப்பது சிறப்பாகும். மும்மூர்த்தி தலம் என்றும், பிரம்மா இங்கு வன்னி மர வடிவில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இங்குள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 2003 ல் நடந்தது. அதன் பின் 22 ஆண்டுகளாக நடைபெறவில்லை. கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணி, கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். திருப்பணி,கும்பாபிஷேகம் நடத்த எம்.எல் ஏ. ராமகிருஷ்ணன் முயற்சியில் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கம்பம் இராமலிங்கம்பிள்ளை டிரஸ்ட் சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் பாஸ்கர் பெரும்பாலான திருப்பணிகளை ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் செய்துள்ளார்.
இன்று காலை 33 அடி உயர கொடிக்கம்பத்திற்கு பாலாலயம் நடந்தது.முன்னதாக கொடி மரத்திலிருந்து சக்தி கும்பத்தில் இறக்கி, பின் யாகசாலை ஹோமங்கள் நடந்தது. இதனை தொடர்ந்து கொடி மர கவசத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ, ராமகிருஷ்ணன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், செயல் அலுவலர் பொன்முடி மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள் பங்கேற்றனர். நவ . 10 ல் முகூர்த்தகால், நவ . 28 முதல் யாக வேள்விகள், டிச. முதல் தேதி காலை 6:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக பணிகள் திவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.