காளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச வில்வ அர்ச்சனை; குவிந்த பக்தர்கள்
ஸ்ரீ காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று தெலுங்கு கார்த்திகை மாதத் திங்கட்கிழமை என்பதால் கோயிலுக்கு பக்தர்கள் அலை அலையாக சாமி செய்ய வந்தனர். கோயிலில் நடைபெறும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வி.ஐ.பி.க்கள் வருகையால் கோவில் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி ஞாயிற்றுக்கிழமை முதல் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு லட்ச வில்வ அர்ச்சனையும், தாயார் ஞானப் பிரசுனாம்பிகைக்கு லட்ச குங்கும அர்ச்சனையும் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளாக சுவாமி அம்மையாருக்கு கோயில் அலங்கார மண்டபத்தில் பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க வில்வ அர்ச்சனை செய்தனர்.விழாவை முன்னிட்டு கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.