தருமபுரம் ஆதீனம் 25வது குருமகா சன்னிதானம் குருபூஜை; குரு மூர்த்தத்திற்கு சிறப்பு பூஜை
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனம் 25 ஆவது குருமஹா சன்னிதானம் குருபூஜையை முன்னிட்டு 27 வது குருமஹா சன்னிதானம் குரு மூர்த்தத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டில் குருமுதல்வர் குரு ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட முதன்மையான சைவத்திருமடம் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்தை இருபத்தாரரை ஆண்டுகள் அருளாட்சி செய்த 25ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கடந்த 1971 ம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி பரிபூரணமடைந்தார். அவரது குருபூஜை இன்று காலை தருமபுரம் ஆனந்த பரவசர் பூங்காவில் அமைந்துள்ள குரு மூர்த்த ஆலயத்தில் நடைபெற்றது. குரு பூஜையை முன்னிட்டு காலை திருமுறை பாராயணம், சொற்பொழிவுகள் நடைபெற்றன. தொடர்ந்து 25 ஆவது குரு மகா சன்னிதானத்தின் குருமூர்த்தத்திற்கு தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்துவைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து மாகேஸ்வர பூஜை நடந்தது. இதில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.