திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா; நவ.25ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நவ. 25ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருவிழா துவக்கமாக நவ. 24 மாலையில் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அனுக்ஞை விநாயகர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும். நவ. 25 காலை 10:40க்கு மேல் காலை 11:05 மணிக்குள் மகர லக்னத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெறும். திருவிழா நடைபெறும் டிச. 4வரை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தினம் காலையில் தங்கச் சப்பரம், விடையாத்தி சப்பரம், மாலையில் தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக் கிடாய், தங்க குதிரை வாகனங்களில் தினம் ஒரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள் பாலிப்பர். மகா தீபம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக டிச. 1ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சியும், டிச. 2ல் பட்டாபிஷேகம், டிச. 3 காலையில் சிறிய வைரத் தேரோட்டம், மாலையில் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், டிச. 4ல் தீர்த்த உற்ஸவம் நடைபெறும்.