குருவாயூர் கோவிலில் சங்கீத உற்சவம் செம்பையில் இருந்து தம்புரா புறப்பாடு
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் நடக்கிறது. நடப்பாண்டு உற்சவம், வரும் டிச. 1ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, குருவாயூர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது. கோவில் வளாகத்தில் உள்ள மேல்புத்தூர் கலையரங்கில், மாலை, 6:00 மணிக்கு நடக்கும் உற்சவத்தை, பிரபல கதகளி நடன கலைஞர் கலாமண்டலம் கோபி துவக்கி வைக்கிறார்.
நிகழ்ச்சியில், இந்த ஆண்டு செம்பை நினைவு விருது கர்நாடக இசைக் கலைஞர் பால்குளங்கரை அம்பிகாதேவிக்கு, கலாமண்டலம் கோபி வழங்குகிறார். அதன்பின், அவரது சங்கீதக் கச்சேரி அரங்கேறுகிறது.
15 நாட்கள் நடக்கும், சங்கீத உற்சவத்தில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
முன்னதாக, நேற்று மாலை, 6:00 மணிக்கு பாலக்காடு செம்பையில் இருந்து வைத்தியநாத பாகவதரின் தம்புரா வாகன ஊர்வலமாக குருவாயூருக்கு புறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மண்ணூர் ராஜகுமாரனுன்னி குழுவினரின் சங்கீதக் கச்சேரி நடந்தது.
அதன்பின், செம்பை வித்யா பீடத் தலைவர் சுரேஷ், செயலாளர் முருகன் ஆகியோரிடம் இருந்து, குருவாயூர் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், நிர்வாகி அருண்குமார், செம்பை சங்கீத உற்சவ கமிட்டி உறுப்பினர்கள் தம்புராவை பெற்றுக்கொண்டனர். குருவாயூர் கோவில் விழா மேடையில் இன்று மாலை தம்புரா பிரதிஷ்டை செய்யப்படுகிறது.