குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் துவக்கம்
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் வரும் டிச. 1ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, செம்பை சங்கீத உற்சவத்தை நேற்று மாலை, 7:00 மணிக்கு பிரபல கதகளி நடன கலைஞர் கலாமண்டலம் கோபி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தேவஸ்தானின் நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமை வகித்தார். சங்கீத உற்சவ துணை கமிட்டி கன்வீனர் விஸ்வநாதன், சதனம் ஹரிகுமார், நாராயணன், வித்யாதரன், தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர் மனோஜ், ரவீந்திரன், பிரஹ்மஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, பிரஹ்மஸ்ரீ தினேசன் நம்பூதிரிப்பாடு, நிர்வாகி அருண்குமார் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில், கர்நாடக இசைக்கலைஞர் பால்குளங்கரை அம்பிகாதேவிக்கு, 10 கிராம் எடை கொண்ட மூலவரின் உருவம் பதித்த தங்கப்பதக்கம், 50,0001 ரூபாய் ரொக்கம், சான்றிதழ் செம்பை நினைவு விருதாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரது சங்கீதக் கச்சேரி நடந்தது. மஞ்சுளா (வயலின்), நாஞ்சில் அருள் (மிருதங்கம்), திருவனந்தபுரம் ராஜேஷ் (கடம்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். நேற்று துவங்கிய செம்பை சங்கீத உற்சவம், 15 நாட்கள் நடக்கிறது. இதில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.