சாமுண்டி மலை நந்திக்கு 32 வகை மஹா அபிஷேகம்
மைசூரு: சாமுண்டி மலையில் உள்ள நந்தி சிலைக்கு, 32 மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
மைசூரு சாமுண்டி மலையில் நந்தி சிலை உள்ளது. இச்சிலைக்கு, மலையில் வசிக்கும் கிராமத்தை சேர்ந்த பெட்டத பாலக நல அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையன்று, அபிஷேகம் நடத்தப்படும்.
அதன்படி நேற்று 21வது ஆண்டாக, இந்த அறக்கட்டளை சார்பில் மஹா அபிஷேகம் நடத்தப்பட்டது. அபிஷேகத்தை சுத்துார் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமிகள், ஆதிசுஞ்சனகிரி மைசூரு கிளை மடாதிபதி சோமநாத சுவாமிகள் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சந்தனம், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், மஞ்சள், குங்குமம், விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, சிந்துாரம், மலர்கள் உட்பட 32 மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகத்தை பார்ப்பதற்காக, சாமுண்டி மலை கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.
கடந்த 2021 அக்டோபரில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, வியூ பாயின்டில் இருந்து நந்தி சிலைக்கு செல்லும் பாதை மூடப்பட்டது.
இதனால், பக்தர்கள், அபிஷேகத்தை பார்க்க உத்தனஹள்ளி, தாவரேகட்டே ஒரு வழிப்பாதை வழியாக வந்தனர்.