ஊட்டியில் ஆருத்ரா தரிசனம் தோடரின மக்கள் கொண்டாட்டம்
ADDED :4664 days ago
ஊட்டி : ஊட்டியில், தோடரின மக்கள் கொண்டாடிய ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜர் அலங்காரத்தில், பவானீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊட்டி பர்ன்ஹில் பகுதியில், பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவில் உள்ளது. தோடர் இன மக்கள், 100 ஆண்டுகளை கடந்து, இக்கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை நடத்தி வருகின்றனர். விழாவையொட்டி, கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தப்பட்டன. டிசம்பர் 28 காலை, அலங்கரிக்கப்பட்ட தேரில், நடராஜர் அலங்காரத்தில், பவானீஸ்வரர் ஊட்டி நகர வீதிகளில் வலம் வந்தார். தோடரின ஆண்கள், பாரம்பரிய உடையணிந்து, தங்களின் கலாசார நடனமாடினர். ஊட்டி பஸ் ஸ்டாண்ட் பாறை முனீஸ்வரர் கோவில், மாரியம்மன் கோவில் உட்பட நகரின் முக்கிய வீதிகளின் இடையில் உள்ள கோவில்களின் முன் நின்று, பாரம்பரிய நடனமாடி, வழிபட்டு சென்றனர்.