உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் காமாட்சிபுரி ஆதீனம் அறிவுரை!

கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் காமாட்சிபுரி ஆதீனம் அறிவுரை!

பல்லடம்; கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும் என, பல்லடம்‌, சித்தம்பலத்தில் நடந்த அமாவாசை வழிபாட்டில் பங்கேற்ற காமாட்சிபுரி ஆதீனம்‌ பக்தர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


பல்லடத்தை அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில், அமாவாசையை முன்னிட்டு, மஹா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது: விநாயகப் பெருமான் தனது தாய் தந்தையரை சுற்றி வந்து ஞானப் பழத்தை பெற்றது போல், மனிதர்களாகிய நாம் கோவில்களுக்குச் சென்று சுற்றி வருவது அவசியம். ஒவ்வொரு பழமொழிகளும் நமது வாழ்க்கையை நெறிமுறைப்படுத்துகின்றன. நமது முன்னோர்களாகிய ஆழ்வார்கள், நாயன்மார்கள் நமக்கு விட்டுச் சென்ற ஆன்மீக வழிமுறைகளை சிரமேற்கொண்டு பின்பற்ற வேண்டும். நாளும் கோளும் நல்லவர்களுக்கு இல்லை. மனிதர்களுக்கு தான் நேரம் காலமெல்லாம். தெய்வங்களுக்கு நேரமே கிடையாது. கண்களை மூடலாம்; கை கால்களை மடக்கி வைக்கலாம். ஆனால், மனதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம். இதற்காகவே, தியானம், யோகா உள்ளிட்டவை தேவைப்படுகின்றன. மூளையின் கட்டுப்பாட்டில் அனைத்து உறுப்புகளும் இயங்குவது போல், கடவுளிடம் நம்மை முழுமையாக ஒப்படைத்து விட வேண்டும். அவ்வாறு நம்மை ஒப்படைத்து விட்டால், அவரே அனைத்தையும் பார்த்துக் கொள்வார். இவ்வாறு நாம் இருக்க வேண்டும் என்றால், பல நிலைகளைக் கடந்து, கடவுளை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கோவிலுக்கு வருகை தந்த கொல்லிமலை பார்த்தசாரதி சுவாமிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களால், நவக்கிரகங்கள் மற்றும் சிவபெருமானுக்கு பக்தர்கள் அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல், பல்லடத்தை அடுத்த, வெங்கிட்டாபுரம் ஸ்ரீஅதர்வண பத்ரகாளி பீடத்தில் அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது. தொடர்ந்து, பல்வேறு திரவியங்களால் பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து, சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் பிரத்யங்கரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !