சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது ஸ்பாட் புக்கிங் 5,000மாக குறைப்பு
சபரிமலை: கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு எதிரொலியாக சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது. ஸ்பாட் புக்கிங் தினசரி எண்ணிக்கை 5 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டது.
சபரிமலையில் இந்தாண்டு மண்டல காலம் துவங்கிய நவ., 17 முதலே போதிய திட்டமிடல் இல்லாததால் நெரிசல் நிலவியது. பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். எருமேலியிலிருந்து பம்பை வரைக்கும் பக்தர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். மரக்கூட்டத்தில் இருந்து சன்னிதானம் வரை பக்தர்கள் எட்டு மணி நேரம் வரை கியூவில் காத்திருந்தனர். அவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் வழங்கப்படவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் ஐயப்பசுவாமியை தரிசிக்க முடியாமல் பம்பையில் இருந்து திரும்பி சென்றனர். பம்பையில் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது. ஏராளமான பக்தர்கள் பந்தளத்துக்கு சென்று அங்கு நெய் தேங்காயை உடைத்து நெய்யை கோயிலில் ஒப்படைத்து ஐயப்பனின் திருவாபரணங்களை வணங்கி ஊருக்கு சென்றனர்.
உயர்நீதிமன்றம் கேள்வி; இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது கருத்து தெரிவித்த சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் விஜயராகவன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர், பக்தர்களை மூச்சு திணற வைத்து கொலை செய்ய அனுமதிக்க முடியாது என்றனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு விளக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிலக்கல் முதல் சன்னிதானம் வரை உள்ள பாதையை நான்கு மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் எவ்வளவு பக்தர்களை தங்க வைக்க முடியும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், சபரிமலையில் ஒரே நேரத்தில் எத்தனை பேரை எதிர்கொள்ள முடியும் என்பதில் திட்டவட்டமான எந்த முடிவும் இல்லாதது கவலைக்குரியது என்றனர். குடிநீரும் உணவும் கழிவறையும் இல்லாத பட்சத்தில் கியூவில் நிற்கும் யாராக இருந்தாலும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து விடுவார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதிக்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கையை 5 ஆயிரமாக உடனடியாக குறைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக குறைப்பு அதன்படி நேற்று முதல் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. நிலக்கல் மற்றும் வண்டிப்பெரியாறில் மட்டுமே ஸ்பாட் புக்கிங் உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. நவ., 24 வரை இது அமலில் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவால் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று சபரிமலையில் இயல்பு நிலை திரும்பியது. பக்தர்கள் வந்து நீண்ட நேரம் காத்திருக்காமல் தரிசனம் முடிந்து சென்றனர். தேவசம்போர்டு வேண்டுகோள் சபரிமலையில் கூட்ட நெரிசலால் பலரும் திரும்பி செல்வதை தெரிந்த சில பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்தும் தங்கள் பயணத்திட்டத்தை ரத்து செய்வதாக தகவல் வெளியானது. இது திருவிதாங்கூர் தேவசம்போர்டை கவலை அடைய செய்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.