திருச்சானூரில் 29 கிலோ தங்க காசு மாலை மேளதாளம் முழங்க ஊர்வலம்
திருமலை; திருப்பதி கோவில் மூலவரான சீனிவாச பெருமாளுக்கு அணிவிக்கப்படும் முக்கியமான தங்க நகைகளில் லட்சுமி ஹாரம் என்றழைக்கப்படும் தங்க காசு மாலை முக்கியமானதாகும். 1008 தங்க காசுகளாலான சுமார் 28 கிலோ எடை கொண்ட இந்த லட்சுமி ஹாரம் என்றழைக்கப்படும் இந்த தங்க காசு மாலை மன்னர் காலத்தில் பெருமாளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இது ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் நடைபெறும் கருடசேவையில், உற்சவரான மலையப்பசுவாமிக்கு அணிவிக்கப்பட்ட நிலையில் அந்த அலங்கார கோலத்தில் மலை மீது உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருடத்திற்கு ஒரு முறை திருப்பதி திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயாருக்கு, திருச்சானுார் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ காலத்தில் கஜ வாகன சேவையின் போது தாயார் இந்த காசு மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். வருகின்ற திங்கள் கிழமை 24ம் தேதி இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்காக மலை மீதிருந்து திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக மாடவீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு கோவிலில் சேர்க்கப்பட்டது.