பிள்ளையார்பட்டியில் புத்தாண்டு சிறப்பு பூஜை!
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, (ஜன.,1)நாளை வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டை முன்னிட்டு காலை முதல் திரளாக பக்தர்கள் வருவதாலும்,விரத கால பக்தர்கள் வருகை அதிகரிப்பாலும் நாளை சிறப்பு அன்னதானம், குடிநீர், மருத்துவ வசதி, நிழல் கொட்டகைக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அரசு போக்குவரத்துக் கழக சிறப்பு பஸ்கள் பல்வேறு ஊர்களிலிருந்து இயக்கப்பட உள்ளது. புத்தாண்டு அன்று அதிகாலை 4 மணிக்கு, நடை திறக்கப்பட்டு திருவனந்தாள், திருப்பள்ளி எழுச்சியுடன் பூஜைகள் துவங்கும். காலை சந்தி, உச்சி காலம்,சாயரட்சை, அர்த்தஜாம பூஜைகள் நடை பெறும். பகல் 1 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, கற்பக விநாயகர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நிர்வாக அறங்காவலர்கள் வலையப்பட்டி ஏ.ராமனாதன், காரைக்குடி எம்.கண்ணன் ஏற்பாடுகளை செய்தனர்.