உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமூர்த்திமலையில் மீண்டும் சிலைகள் பிரதிஷ்டை!

திருமூர்த்திமலையில் மீண்டும் சிலைகள் பிரதிஷ்டை!

உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் அமைந்துள்ள பஞ்சலிங்கேஸ்வரர் ஆலயத்தில், காட்டாற்று வெள் ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிலைகள் மீண்டும் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணியில் அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. திருமூர்த்தி மலைக்கு மேலுள்ள பஞ்சலிங்க அருவியும் உள்ளது. அருவிக்கு வெண்டையாறு, வண்டியாறு, கொட்டையாறு, பாறைப்பட்டியாறு, குருமலையாறு, உளுவியாறு, கிழவிப்பட்டி ஓடை பகுதிகளிலிருந்து நீர் வரத்துள்ளது. மலைப்பகுதியிலிருந்து விழும் அருவியின் மேற்பகுதியிலுள்ள பாறைகளுக்கு நடுவே ஒரு அடி அகலத்தில், சுயம்புவாக ஐந்து லிங்கங்களும் உள்ளன. பக்தர்களின் வசதிக்காக சுயம்புவாக உள்ள பஞ்சலிங்கம் அமைந்துள்ள இடத்தின் அருகே 1975ம் ஆண்டு விநாயகர், முருகன் சிலை மற்றும் ஐந்து லிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழக்கம் போல் பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், 1986ம் ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பின், மீண்டும் 2002ம் ஆண்டு மீண்டும் ஐந்து லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை நடந்தது.

2009ம் ஆண்டு மீண்டும் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், மூன்று லிங்கம் மற்றும் முருகன் சிலைகள் அடித்து செல்லப்பட்டன. இந்நிலையில், மீண்டும் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு பிப்., மாதம் மீண்டும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கடந்தாண்டு டிச., மாதம் பெய்த கன மழை காரணமாக மீண்டும் இரண்டு லிங்கம் மற்றும் முருகன் சிலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், பஞ்சலிங்க அருவியிலுள்ள மூன்று லிங்கம் மற்றும் விநாயகர் சிலைகளுக்கு மட்டும் பூஜைகள் நடைபெறுகிறது. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், " பஞ்சலிங்க அருவியில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிலைகளுக்கு பதிலாக மீண்டும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்காக சிலைகள் திருச்சியிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. அவ்வப்போது ஏற்படும் மழையினால் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லாத வகையில், சிலைகள் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தை மாதத்திற்குள் பிரதிஷ்டை செய்ய நடவடிக்கையெடுக்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !